குறளின் அழகை அபிநயித்த ஷீலாவின் நடனம் | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements
குறளின் அழகை அபிநயித்த ஷீலாவின் நடனம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2010
00:00

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 31வது இயல், இயல், நாடக விழாவும், 22வது பரதம் விழாவும் வாணி மகாலில் வெகு விமரிசையாக துவங்கியது. விழாவை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகா தேசிகன் துவங்கி வைத்தார். அசோக்லேலண்டு சேஷசாயி விழாவுக்கு தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஓ.பி., வங்கி சேர்மன் எம்.நரேந்திரா சேர்மன் இயக்குனர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை இயக்குனர் ப்ரீதா ரெட்டி கலந்து கொண்டனர். விழாவில் வாணி கலா சுதாகரா விருதை சஞ்சய் சுப்ரமணியம், நாகை முரளீதரன், நெய்வேலி நாராயணன், ரமா வைத்யநாதன், குடந்தை மாலி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களை க்ளீவ்லேண்ட் சுந்தரம் வாழ்த்திப் பேசினார். இதை தொடர்ந்து ஸ்ரீதேவி ந்ருத்யாலயாவின் ஷீலா உன்னிகிருஷ்ணனின் மாணாக்கியர்களின், குறளின் குரல் கருத்துக் கோவை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஷீலா உன்னிகிருஷ்ணன் வளரும் கலைஞர்களுக்கு வரப்பிரசாதம். குழு நடன நிகழ்ச்சி அமைப்பதிலும் சரி, தனிநபர் நடன அமைப்பிலும் இவருக்கு நிகர் இவரே. இவரின் வெற்றிக்கு காரணங்கள் பெற்றோர், மாணவர்கள் பக்கபலம், அரங்க அமைப்பு, ஒப்பனை, ஒளி, ஒலி அமைப்பு, பக்கவாத்ய அமைப்பு, கடைசியாக கடின உழைப்பு இவை அனைத்தையும், கவனமாக கையாண்டு தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். மேலும், தனது நடன வடிவமைப்பை தமிழில் அதிகம் செய்வதால், எளிதில் ரசிகர்கள் புரிந்து கொள்ள முடிகிறது. "குறளின் குரல்' என்ற குழு நடன கருத்துக் கோவை நிகழ்ச்சியில் திருக்குறளின் வான்சிறப்பு, ஒழுக்கச் சிறப்பு போன்ற முக்கிய அதிகாரத்தில் உள்ள குறளை இசை அமைத்து மார்க்கத்தினுள் அழகாக கொண்டு வந்து கொடுத்தார். அகர முதல, இன்னா செய்தாரை, காலத்தினாற் செய்த போன்ற குறளை இசைத்து அம்ருதவர்ஷிணி ராகத்தில் சிறப்பாக துவங்கி, மழையின் சிறப்பை வான் நின்று உலகம் என்பதில் மழை நீர் செய்ய ஆரம்பித்து வெள்ளமாய் எப்படி ஆகிறது என்பதைக் காட்டினர். ஷீலாவின் மாணாக்கியர்கள் வெகு சிறப்பாக ஆடினர். அடுத்து குறளைக் கொண்டே வர்ணம் வடிவமைத்து, அதில் சஞ்சாரிக்கும் நவரசங்களை விளக்கும் வகையில் அகல்யா சாபவிமோசனம், குசேலோபாக்யானம், நரசிம்ம அவதாரம் ஆகிய காட்சிகளை கொடுத்து நவரசங்களை விளக்கி ஆடினர். ஜதி அமைப்பு அம்சமாக இருந்தது. ஷீலா உன்னிகிருஷ்ணனின் குழு நடனத்தில் மிகப் பிரசித்திப் பெற்றது பின்னல் கோலாட்டம். மிகச் சிறப்பாக, நேர்த்தியாக துளிக்கூட பிசிறில்லாமல் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் இதைச் செய்தது பிரமிக்க வைத்தது. கோலாட்டம், கும்மி, பின்னல் கோலாட்டம் எல்லாம் மறந்து போன நிலையில் இவர் அதை மீண்டும் புத்துயிர் கொடுத்து ஆட வைத்திருப்பது மிகவும் சிறப்பு. மேலும் தமிழ் பேசவோ, பழகவோ அதிகம் முனைப்புக்காட்டாத இக்காலத்தில் தமிழைத் தாரக மந்திரமாக எடுத்து, அதுவும் திருக்குறளை எடுத்து அதற்கு செய்திருப்பதுதான் தனிச் சிறப்பு. பதம் என்ற மார்க்க இசை வடிவத்துக்கு நாயக, நாயகியின் உறவை சித்தரிக்கும் வகையில் "மதியும் மடந்தை முறுவலும் என்ற குறளில் அதன் பொருளை மையக் கருத்தாக வைத்து, வானத்து நட்சத்திரங்கள் தன் நாயகியின் முகத்தை நிலவென்று எண்ணி கலங்கி தவித்ததை சொன்ன உவமை பாராட்டப்பட வேண்டியதாகும். நல்ல அழகிய கற்பனை வளம். நட்டுவாங்கம் ஷீலா, குரலில் சித்ராம்பரி, மிருதங்கம் தனஞ்செயன், வீணையில் ஸ்ரீராம், குழலில் தேவராஜன், வயலினில் கண்ணன் என மிக அழகான கூட்டணி. ஒப்பனை ÷ஷாபா. இவர் கைகளில் என்ன மாயம் வைத்திருக்கிறாரோ. இவர் கைப்பட்டால் சாதாரண முகம் கூட அழகு முகமாக மாறிவிடும் போல ஒப்பனை, ஒப்பிட முடியாத அழகு என்று கூறலாம். ஷீலாவின் கூட்டணி யானை பலம் பொருந்தியது.
- ரசிகப்ரியா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X