ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:00

மார்கழி என்றாலே பல சிறப்புகள் உண்டு. அதிகாலைப்பனி, திருப்பாவை, திருவெம்பாவை, பஜனை, சபாக்கள் நிரம்பிய வழியும் இசை, நாட்டியக் கச்சேரிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தானோ என்னவோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூட மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளான். பகவான் கிருஷ்ணனின் ஒவ்வொரு அசைவுமே ஒவ்வொரு வைபவம், அவனது லீலைகளை எத்தனைமுறை கேட்டாலும் சரி, பார்த்தாலும் சரி சலிக்கவே செய்யாது.
இவ்வாண்டு மார்கழியில், குரு ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஸ்ரீதேவி நிருத்யாலயா நாட்டியப்பள்ளி மாணவியர்கள் பங்கு பெறும் “ஸ்ரீகிருஷ்ண வைபவம்’ நாட்டிய நாடகம் அரங்கேறியுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனை, ஆசானாக, சற்குருவாக, காதலனாக, சேவகனாக, தோழனாகப் பல்வேறு மாறுபட்ட கோணங்களில் நம்முன்னே காட்டுகிறார் ஷீலா உன்னிகிருஷ்ணன்.
முதல் காட்சியில் தவழந்துவரும் கண்ணனின் படிப்படியான வளர்ச்சியினையும் அப்போதெல்லாம் அவன் செய்யும் லீலைகளையும் மிகவும் தத்ரூபமாகக் காண்பிக்கின்றனர் நடன கலைஞர்கள். கண்ணன் வெண்ணெய் திருடித் திண்பதாகட்டும், மண்ணை உண்டு வாயில் உலகைக் காட்டுவதாகட்டும், கோபியர்களுடன் அவன் செய்யும் லீலைகளாகட்டும் எல்லாமே மிகவும் நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளன. கண்ணன் தான் செய்யும் குறும்புகளின் மூலம் வேதங்களை விளக்கிடும் மெய்ப்பொருளாகவும், மானிட வாழ்விற்கு வழிகாட்டும் நல்லாசிரியராக விளங்குவதையும் விளக்குகிறது முதல்காட்சி.
இரண்டாவதாக, ஆபத்பாந்தவனாக, சற்குருவாக கண்ணனை நம்முன்னே கொண்டு வந்தனர் நடனமணிகள், ஓடத்தில் போகும் கோபியர்கள் கண்ணனை ஓடத்தில் ஏற்றிக் கொள்ள மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள், மாடுமேய்ப்பவன் எப்படி ஓடம் ஓட்டுவான், சிறுவன் என்றெல்லாம் சகலமும் அறிந்தவன் கிருஷ்ணன் என்பதை அறியாமல் ஏளனம் செய்கின்றனர். கண்ணன் தனது மச்ச, கூர்ம, அவதாரங்களைப் பற்றியும், பாற்கடலில் தான் தனது சயனம் என்பதை எல்லாம் கூறித் தனக்கும் நீருக்கும் உள்ள தொடர்பை விளக்கி அவர்களுடன் ஓடத்தில் பயணம் செய்கிறான். அங்கேதான் அவனது விளையாட்டுத் தொடங்குகிறது. திடீரென புயல், சூறாவளி, பேரலைகள் என ஓடம் தத்தளிக்க, ஓடத்தில் ஓட்டை ஏற்படுகிறது. கண்ணன் கோபியரை அவர்களது ஆடையினைக் கொண்டு ஓட்டையினை அடைக்கச் சொல்கிறான். தயங்கிய கோபியர் பின் அவன் சொற்படி செய்கின்றனர். “நிர்வாணம் உடலுக்குத்தான்! ஆன்மாவிற்கு அல்ல!’ என்பதை புரியவைக்கிறான் சற்குருவான ஸ்ரீகிருஷ்ணன்.
அடுத்ததாக, காதலனாகக் கண்ணன், பொதுவாகவே, “கண்ணா வருவாயா?’ என்று ஏங்கும் ராதாவைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். இங்கே வித்தியாசமாக ராதாவைப் பிரிந்து துயரில், தாபத்தால் தவிக்கும் கண்ணனைக் காண்கிறோம். ராதை கண்ணனின் கண்களில் தெரிவதும் மறைவதுமான காட்சி அமைப்பும், அதற்கேற்ற கண்ணனின் பாவங்களும் மிகவும் அருமை.
அடுத்த காட்சியில் சேவகனாகக் கண்ணன், தனது பால்ய சிநேகிதன் குசேலன் வருவதை எண்ணி சந்தோஷத்தில் வாயிலையே நோக்கியிருக்கும் கண்ணன். நண்பன் வந்தவுடன் அவனது கால்களைக் கழுவி, மரியாதை செய்து, உண்பதற்கு உணவு பரிமாறுகிறான். அமுதம் போன்ற உணவும் குசேலனுக்கு உண்ணப் பிடிக்கவில்லை. காரணம் அவனுடையக் குடும்பச் சூழல். கண்ணன், குசேலனை உறங்க வைத்துக் கால்களைப் பிடிதத்து விடுகிறான். பாமா, ருக்மணி இருவருக்கும் சற்று மன வருத்தம். கிருஷ்ணன் கால்களைப் பிடிப்பதா என்று. அதற்கு கிருஷ்ணன் கொடுக்கும் விளக்கம் ஃபிளாஷ் பேக்கில் விரிகிறது. குசேலனது குடும்ப வறுமை, அவன் நெடுந்தொலைவு நடந்துவந்தது எனக் காட்சிகள் விரிகிறது. கண்விழித்த குசேலன் திடுக்கிடுகிறான். கண்ணனா தன் கால் பிடித்தது என்று. பிறகு கண்ணன் தனக்காக என்ன கொண்டு வந்துள்ளாய் எனக் குசேலரிடம் கேட்க, குசேலன் சற்று தயங்க, அவலை ஆவலுடன் கேட்டு வாங்கி உண்கிறான் பரந்தாமன். ஆனால் இறுதிவரை குசேலன் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவில்லை கண்ணனிடம். ஆனால் அவனுக்குத் தெரியாதா என்ன! குசேலன் எல்லா வளங்களையும், செல்வங்களையும் பெற்று நீடூடி வாழ அருளுகின்றான். பள்ளி நாட்களில் குசேலன் செய்த உதவிக்கு கண்ணன் இன்று சேவகனாக மாறி நட்பின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறான்.
அடுத்த காட்சிகள் தோள் கொடுப்பான் தோழன் என்று எடுத்துக் காட்டுகிறான். கவுரவர்கள் வெற்றிபெற, களபலி கொடுக்க உகந்த நாள் எது என துரியோதனன் கேட்க, ஜோதிட சாஸ்திர வல்லுநரான சகாதேவன் அமாவாசை உகந்த தினம் என்று கூறிவிடுகிறான். அதனை அறிந்த பரந்தாமன், அதனைத் தடுக்க சதுர்த்தசி அன்று பிதுர்தர்பணம் செய்கின்றான். சூரிய, சந்திரர்களுக்குக் குழப்பம் கிரக சஞ்சாரத்தில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ என்று எண்ணி கண்ணனிடம் ஒன்றாகப் போய் விளக்கம் கேட்கின்றனர். அதற்குக் கண்ணன் நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் இருவரும் நேராகச் சந்திக்கும் நாளே அமாவாசை, ஆகவே இன்றே அமாவாசை என்று கூறி விடுகிறான். அதனால் துரியோதனன் களபலி கொடுக்கும் நாள் பிரதமை ஆகிவிடுகிறது. மகாபாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாக வரும் கண்ணன், கர்ணின் நாகாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனைக் காத்து உயிர் காப்பான் தோழன் என்று உணர்த்துகிறான் பகவான்.
மகாபாரதப் போர்க்களக் காட்சியில் தேராவும், தேர்ச்சக்கரங்களாகவும், குதிரைகளாகவும், தன நடனப் பள்ளி மாணவியரை மிகவும் தத்ரூபமாகவும் நேர்த்தியாகவும் மாற்றிக் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் குரு ஷீலா.
இறுதிக் காட்சியில், அனைத்துக் காட்சிகளிலும் இடம்பெற்ற கண்ணன்களும், மற்ற கதாபாத்திரங்களும் மேடையில் ஒன்றாகத் தோன்றி ஸ்ரீகிருஷ்ண வைபவத்தின் பிரம்மாண்டத்தினை உணர முடிந்தது. தவழ்ந்துவந்த கிருஷ்ணன் முதல் விஸ்வரூப தரிசனம் தந்த கிருஷ்ணர் வரை சுமார் 80 பேர்கள் மேடையில் காட்சிதந்தனர். அரங்கத்தினரின் கரவொலி விண்ணைப் பிளந்தன. ஒவ்வொரு காட்சியிலும் குரு ஷீலா அவர்களின் உழைப்பும், நடன அமைப்பும் மிகச்சிறப்பாக அமைந்திருந்ததைக் காண முடிந்தது. காட்சி முடிந்து கிளம்பும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும், திருப்தியையும் காண முடிந்தது. அது ஸ்ரீதேவி நிருத்யாலயாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
கதாபாத்திரங்களுக்கேற்ற மாணவியரைத் தேர்ந்தெடுத்த குருவையும், குருவின் எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாகப் பூர்த்தி செய்த மாணவிகளையும் எத்தனை பாராட்டினாலும் தகும். முதல் காட்சி முதல், இறுதியில் குரு ஷீலா ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தும் வரை பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டுவதே அதற்குச் சாட்சி. ஸ்ரீகிருஷ்ண வைபவம் ஒரு சுகானுபவம்.
பாராட்டு மழையில் நனைந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த குரு ஷீலா உன்னிகிருஷ்ணனிடம் இந்நாட்டிய நாடகத்தினைப் பற்றிப் பேசினோம்...
“எங்களது நாட்டியப்பள்ளி ஸ்ரீ தேவி நிருத்யாலயா தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளி விழா ஆண்டினைக் கொண்டாடவும், இந்த ஆண்டு இசை நாட்டிய விழாவினைச் சிறப்பிக்கவும் உருவானதுதான் ஸ்ரீகிருஷ்ண வைபவம். பாரதியார் கண்ணனைத் தோழனாக, சேவகனாக, சற்குருவாக பலவாக பாவித்தார். அவரது பாடலை மனத்தில் கொண்டு நான் உருவாக்கியதுதான் இந்நாட்டிய நாடகம். ஒரு வித்தியாசமான கோணத்தில் கண்ணனை உங்கள் கண்முன்னே கொண்டுவர முயற்சி செய்துள்ளோம்.
இது கண்டிப்பாக ஒரு கூட்டு முயற்சி. சுமார் 80 நடனக்கலைஞர்களை மேடையில் ஆட வைக்க வெளியே சுமார் 100 பேர் கொண்ட குழுவின் அபாரமான உழைப்பும் ஒரு காரணம். ரசிகர்களின் கைத்தட்டலையும், ஆரவாரத்தையும் கேட்கும்போது நாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. இந்த வெற்றிக்குப் பலருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். குறிப்பாக அத்தனை கலைஞர்களுக்கும். ஒப்பனை மூலம் உயிர் கொடுத்த எனது சகோதரி ஷோபா கோரம்பில் மற்றும் எனது மூத்த மாணவிகளுக்கும் எத்தனைமுறை நன்றி சொன்னாலும் போதாது. மேலும் மிகச்சிறப்பாகப் பாடல்களை எழுதிக் கொடுத்த கவிஞர் பத்மதேவன், மிகச்சிறப்பாக இசையமைத்துத் தந்த குல்திப் பய் மற்றும் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.
சத்யம், சிவம், சுந்தரம், ஷடாக்ஷரம், ராவணேஸ்வரம், பார்வதி பரிணயம், பாலராமாயணம், ஜனனி ஜகத்கரணி, கிருஷ்ணமஞ்சரி போன்ற எங்களது பதினோராவது படைப்பான இந்த “ஸ்ரீகிருஷ்ண வைபவம்’ நாட்டிய நாடகத்திற்கு இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் அங்கீகாரமும், உதவியும் கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தினைத் தருகிறது.’

- கௌசிக் ராஜா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X