காத்திருந்தாயோ... கனவுகளை சிதைக்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருந்தாயோ... கனவுகளை சிதைக்க!

Added : மார் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காத்திருந்தாயோ... கனவுகளை சிதைக்க!


'உடம்பெல்லாம் எரியுதே... எப்படியாவது காப்பாற்றுங்கள்...'


துடித்தவர்களுக்கு ஆடைகள் கொடுத்த இளைஞர்கள்


தேனி மாவட்டம் போடி அருகே கொலுக்குமலையில் ஏற்பட்ட காட்டு தீயில் காயமடைந்து துடித்தவர்களை குரங்கணி கிராம இளைஞர்கள் தான் முதலில் சென்று மீட்டனர். அப்போது, 'உடம்பெல்லாம் எரியுதே. எப்படியாவது காப்பாற்றுங்கள்...' என கதறியவர்களுக்கு ஆடைகளை கொடுத்து உதவினர்.

சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 39 பேர் காட்டுத்தீயில் சிக்கிய தகவல் தெரிந்தவுடன் குரங்கணியைச் சேர்ந்த மணிகண்டன், கருப்பசாமி, ரஞ்சித் குமார் உள்ளிட்ட இளைஞர்கள் மதியம் 2:30 மணிக்கு அந்த இடத்திற்கு சென்று விட்டனர்.இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:சம்பவம் நடந்து அரை மணிநேரத்தில் நாங்கள் சென்று விட்டோம். தீக்காயம் அடைந்தவர்கள் அலறினர். 'உடம்பெல்லாம் எரியுதே... எப்படியாவது காப்பாற்றுங்கள்' என வலியால் துடித்தனர். பலர் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஆனால் சிலருக்கு மட்டும் கொடுக்கவே தண்ணீர் இருந்தது. பலரின் ஆடைகள் கருகியதால் எங்கள் சட்டை, வேட்டி, கைலியை கழற்றி அவர்களுக்கு கொடுத்தோம்.

முதலுதவி இல்லாததால் அவதிப்பட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் சிலர் பள்ளத்தில் கிடந்தவர்களை மீட்காமல், அலைபேசியில் தகவல் தெரிவித்தபடியே இருந்தனர். கிராமத்தினர் சிலர் எங்களுடன் இணைந்து வேட்டியால் 'டோலி 'கட்டி பள்ளத்தில் கிடந்த 5 பேரை வெளியே துாக்கினோம். இரண்டு பேர் எடை அதிகம் என்பதால் எங்களால் துாக்க முடியவில்லை, என்றார்.


வனத்துறையின் அனுமதி பெறவில்லை: துணை முதல்வர், அமைச்சர் தகவல்

'குரங்கணி கொழுக்குமலைக்கு மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையின் அனுமதி பெறவில்லை' என துணைமுதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தனர்.

குரங்கணியில் பன்னீர்செல்வம் கூறுகையில், ''மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. இந்த வழியில் மலையேற்றம் செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.

அவர்கள் எப்படி சென்றார்கள் என தெரியவில்லை. பாதை மாறிச் சென்று விபத்தில் சிக்கியுள்ளனர்,'' என்றார்.அமைச்சர் சீனிவாசன் கூறுகையில், ''வனத்துறை அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றுள்ளனர். அனுமதி பெற்றிருந்தால் முன்கூட்டியே உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும்,'' என்றார்.


ஹெலிகாப்டரால் முடியாது ஆளில்லா விமானத்தால் முடியும்


''ெஹலிகாப்டர் செய்ய முடியாததை ஆளில்லாத விமானத்தை அனுப்பி தகவல்களை துரிதமாக சேகரிக்க முடியும்,'' என சென்னை அண்ணா பல்கலை விண்வெளி பொறியியல் துறையின் விண்வெளி மைய இயக்குனர் கே.செந்தில்குமார் கூறினார்.

அவர் கூறியதாவது:மீட்பு குழுவினருக்கு விரைவாக தகவல்களை சேகரித்து கொடுக்க 20 பேர் கொண்ட குழுவாக வந்துள்ளோம். நான்கு ஆளில்லாத விமானங்கள் மூலம் விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

ஹெலிகாப்டர் செல்ல முடியாத குறுகிய பகுதிக்கு கூட ஆளில்லாத விமானம் சென்று ஆள் நடமாட்டம், இறந்தவர் குறித்து துல்லியமாக தகவல் தெரிவிக்கும். இதற்காக 'நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையம்' குரங்கணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்த போது மண்ணிற்குள் புதைந்தவர்கள் குறித்து கண்டறிய 'தெர்மல் கேமரா' மூலம் கண்காணிக்கப்பட்டது. உயிருடன் இருப்பவரின் உடல் வெப்பத்தை கணக்கிட்டு 'எக்ஸ்ரே பிலிம்' போல் வெள்ளையாகவும், உயிர் இல்லாதவர் என்றால் கருப்பாகவும் அது கணித்து விடும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மண்ணில் புதைந்த 12 பேரை மீட்டோம்.

குரங்கணி தீ விபத்து குறித்து ஆளில்லாத விமானம் மூலம் ஒலிபெருக்கி, புகைப்படங்கள், வீடியோ எடுக்கலாம். ஒரு வேளை ஆட்கள் உயிருடன் இருந்தால் ஒலி பெருக்கி மூலம் அவர்களை தொடர்பு கொண்டு மீட்பு பணியை சுலபமாக்கலாம். இன்று (நேற்று) காலையில் குரங்கணி வந்தோம். விபத்து நடந்த பகுதிக்கு ஆளில்லாத விமானம் சென்றுள்ளது. அங்கிருந்தபடி புகைப்படம், வீடியோவை அனுப்பி வருகிறது. இதை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடி அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பப்படும். இதன் மூலம் தீ விபத்தில் சிக்கியோர் குறித்து துல்லியமாக தகவல் பெறப்படுகிறது, என்றார்.ராஜினாமா செய்வாரா...


பேட்டியின் போது, 'வனத்துறை அதிகாரிகள் கவனக்குறைவால் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்வாரா, அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது...' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ''தற்போது மீட்பு பணிகள் நடக்கிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும்,'' என பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

ஆனால் குறிப்பிட்ட ஒரு 'டிவி' நிருபர் மீண்டும் மீண்டும், 'வனத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வாரா' என்ற கேள்வியை கேட்டார்.''பிரச்னை கிளப்ப வேண்டும் என தேவையில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள். இடத்தை விட்டு கிளம்புங்க தம்பி...'' என பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். இதையடுத்து கட்சியினருக்கும், நிருபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


வசூலில் வனத்துறை


இச்சம்பவம் குறித்து கிராமத்தினர் கூறியதாவது: குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை வழியாக 'மலையேற்றம் செல்ல அனுமதி உண்டு. ஆனால் அனுமதியில்லாத மற்றொரு பாதையில் சென்னையை சேர்ந்தவர்கள் சென்றனர். இதுபோல் பலர் இந்த வழியில் செல்கின்றனர். ரூ.200 கொடுத்தால் தாராளமாக வனத்துறை அனுமதி அளிக்கிறது. ஒரு வாரமாக தீ பரவிவரும் நிலையில் ஆபத்து தெரியாமல் மலைக்கு சென்று விட்டனர். வனத்துறையினரும் இதில் அலட்சியமாக இருந்துவிட்டனர், என்றனர்.
கணவர் பலி; தப்பிய மனைவி


கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 27; பி.டெக்., - ஐ.டி., படித்துள்ளார். கல்லுாரி காலத்தில் இருந்து, திவ்யா அடிக்கடி மலையேற்றத்துக்கு சென்று வந்தார். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விபின், 31, பி.டெக்., - ஐடி., படித்து, சென்னையில் உள்ள, ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வந்தார்.அங்குள்ள நண்பர்களுடன் அடிக்கடி மலையேற்றம் சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது, விபின், திவ்யா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்துள்ளனர்.திருமணத்துக்கு பின், ஐ.டி., வேலையை விட்டு, கிணத்துக்கடவில் உள்ள திவ்யாவின் பெற்றோர் வீட்டில் தங்கி, அவர்களின் குடும்பத்துக்கு சொந்தமான மர மில் நிர்வாகத்தை விபின் கவனித்தார். ஆயினும், தம்பதி, ஆண்டுதோறும் மலையேற்றம் செல்வதை கைவிடவில்லை. நேற்று முன்தினம், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி, விபின் உயிர் இழந்தார். தீ காயங்களுடன் தப்பிய திவ்யா, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.பலியான விபின், திருமணத்துக்கு முன், தேனி, கம்பம் பகுதியிலுள்ள நண்பர்களுடன், 'புல்லட்' வாகனத்தில் குரூப்பாக , 'பாரஸ்ட் ரெய்டு' செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். விபினை நண்பர்கள், 'வனக்காதலன்' என பட்டப்பெயர் சூட்டி அழைத்துள்ளனர்.10 பேர் பலி 26 பேர் காயம்


குரங்கணி காட்டுத்தீயில் பலியானவர்கள் விபரம்:

1. ஈரோடு முத்துக்குமார் மகள் திவ்யா, 25.


2. ஈரோடு கவுந்தப்பாடி நடராஜன் மகன் விவேக், 32.


3. கும்பகோணம் கிருஷ்ணமூர்த்தி மகள் அகிலா, 25.


4. மதுரை புதுவிளாங்குடி திருஞான சம்மந்தம் மகள் ஹேமலதா, 30.


5. சென்னை ஸ்ரீபெரும்புதுார் பாலாஜி மனைவி புனிதா, 26.


6. ஈரோடு கவுந்தப்பாடி தங்கராஜ் மகன் தமிழ்செல்வம்,26.


7. கடலுார் திட்டக்குடி செல்வராஜ் மகள் சுபா, 28.


8. சென்னை பூந்தமல்லி ரகுராமன் மகன் அருண்பிரபாகரன்,35.


9. கன்னியாகுமரி உண்ணாமலைக்கடை தாமோதரன் மகன் விபின், 30.


10. சென்னை தமிழ்மொழி மகள் நிஷா, 27.


காயமடைந்தவர்கள்:


பலியான ஈரோடு விவேக் மனைவி திவ்யா, 29, திருப்பூர் ராஜசேகர், 29, திருப்பூர் சரவணன் மகள்கள் பாவனா, 12, சாதனா, 11, ஈரோடு செந்தில்குமார் மகள் நேகா,9, சென்னை கல்யாணராமன் மகள் சகானா, 20, சென்னை வடபழனி மோகன்ராஜ் மகள் நிவேதா,23, காஞ்சிபுரம் முடிச்சூர்

ரவி மகள் விஜயலட்சுமி, 27, சென்னை வேளச்சேரி பியூஸ் மகள் பூஜா, 27, சென்னை மடிப்பாக்கம் தனபால் மனைவி மோனிஷா, 30, தாம்பரம் முத்துமாலை மகள் அனுவித்யா, 25, போரூர் சந்திரன் மனைவி இலக்கியா, 29, ஈரோடு சென்னிமலை தண்டபாணி மகன் பிரபு,30, ஈரோடு செந்தில்குமார் மனைவி சபிதா, 35, சென்னை தினேஷ் மனைவி சுவேதா, 28, ஈரோடு கவுண்டம்

பாளையம் கிரி மகன் கண்ணன், 26, சேலம் பழனிசாமி மகள் தேவி, 28, சென்னை ராஜன் மகள் திவ்யா பிரக்ருதி, 24, திருப்பூர் சரவணன் மனைவி சக்திகலா, 40, உடுமலைப்பேட்டை முருகபூபதி மகள் சிவசங்கரி, 25, ஈரோடு ராமர் மகன் சதீஷ்குமார், 29, சென்னை சூரியநாராயணன் மகள்

பார்கவி, 23, சென்னை இளங்கோவன் மனைவி ஜெயஸ்ரீ, 32, கிருஷ்ணமூர்த்தி மகள் சாய்வசுமதி, 20, கோவை விஸ்வநாதன் மகள் திவ்யா, 27, கேரளாவை சேர்ந்த மினா ஜார்ஜ்.ஈரோடு புது மாப்பிள்ளை பலிகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட இருவர் பலியாயினர்.தேனி மாவட்டம், கொழுக்கு மலைக்கு சுற்றுலா மற்றும் மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள், நேற்று முன்தினம் காட்டு தீயில் சிக்கினர். இவர்களில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, எட்டு பேர் அடங்குவர்.இவர்களில், கவுந்தப்பாடியைச் சேர்ந்த நான்கு பேர், விபத்தில் சிக்கினர். பொம்மன்பட்டி, மகாத்மாபுரத்தைச் சேர்ந்தவர் விவேக், 28; சாப்ட்வேர் இன்ஜினியர்; மனைவி திவ்யா, 25; இவர் கோபி,

பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பணிபுரிகிறார். திருமணமாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது.அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 24; இவர், டி.எம்.இ., முடித்து, சென்னையில் பணிபுரிந்தார்.கவுந்தப்பாடி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 26. இவர்கள் நால்வரும் பலத்த காயமடைந்தனர். இதில், விவேக், தமிழ்செல்வன் இறந்து விட்டனர். திவ்யா, கவலைக்கிடமாக உள்ளார்.இறந்தவர்களில், சென்னை, டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியாற்றிய, கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண் அகிலாவும், 24, ஒருவர்.இதையறிந்த, இவரது பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, 70, சாந்தி, 60, ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அகிலாவின் உடலை பெற்றுவர, அவரது உறவினர்கள் தேனி சென்றுள்ளனர்.
பலியானவர் உடல் தகனம்


தீயில் பலியானவர்களில் அருண் பிரபாகர்,37, ஒருவர். இவர் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ரகுராமன் நிலக்கிழார். அருண் பிரபாகர் சென்னை மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார்.

மலையேறுவதில் ஆர்வமுடைய இவர், பல்வேறு மலைகளுக்கு சென்று பயிற்சி பெற்றார். குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கி பலியானார். அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.புதுமண பெண் பலி


ஸ்ரீபெரும்புதுாரை, சேர்ந்தவர் பாலாஜி, 30. தனியார் தொழிற்சாலை அதிகாரி.இவருக்கு புனிதா, 26, என்பவருடன், இந்த ஆண்டு ஜனவரி, 28ல் திருமணம் நடந்தது. ஐ.டி., நிறுவனத்தில் புனிதா பணியாற்றி வந்தார்.


தோழிகளுடன், குரங்கணி மலைக்கு மலையேற்றத்திற்கு புனிதா சென்றார்.அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் உடல் கருகி பலியானார்.
'உடல்களை தான் மீட்க முடிந்தது'காட்டுத்தீ பரவிய ஒத்தமரம் பகுதிக்கு அருகே 2 கி.மீ.,ல் சோலைக்காடு உள்ளது. இப்பகுதியில் தீப்பிடிக்காது. வழிகாட்டி இருந்திருந்தால் சுற்றுலா பயணிகளை சோலைக்காட்டிற்கு அழைத்து சென்றிருப்பார். அவர் இல்லாததால் தீ பரவியதும் நாலா திசையிலும் சிதறி ஓடியுள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற பயத்தில், செங்குத்தான பள்ளத்தில் விழுந்து ஒன்பது பேர் பலியாகி விட்டனர். தீயில் வெந்த உடல்கள் கீழே விழுந்ததில் சிதறி இருந்தது. ஐந்து பேர் உடல்களை கயிறு கட்டி மீட்டோம். நான்கு பேர் உடல்களை மீட்க முடியவில்லை. செங்குத்தான பள்ளத்தாக்கில் உயிருக்கு போராடியவர்களை உடனடியாக காப்பாற்ற வழியில்லாமல் போனது. எனினும் ஒருவரை உயிருடன் மீட்டோம். அவரும் இரவு 12:00 மணிக்கு பரிதாபமாக இறந்து விட்டார். குரங்கணி வழியாக கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன் வரை மலையேற்றம் செல்ல வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இவர்கள் அனுமதி பெற்றதாக தெரியவில்லை. வழிகாட்டிகள் இல்லாமல் மலைகளில் சென்றால் ஆபத்தில் தான் முடியும்.

மாரிமுத்துசுற்றுலா வழிகாட்டி, கொட்டகுடிதலைமை செயலருக்கு கலெக்டர் அறிக்கை

தீ விபத்து குறித்து தலைமைச் செயலாளருக்கு, தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மார்ச் 10ல் குரங்கணி மலைப் பகுதிக்கு 36 பேர் 'டிரக்கிங் 'செல்ல வந்திருந்தனர். அங்கு மார்ச் 11ல் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் 27 மீட்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பத்து பேர் காயமின்றி தப்பியுள்ளனர். விபத்தில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபரங்கள் அறிந்து கொள்ள


விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் விபரங்களை உறவினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04546 - - 291 718, 293 500 என்ற எண்களில் அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-மார்-201814:13:22 IST Report Abuse
Pasupathi Subbian மனம் வருந்துகிறது. ஏறத்தாழ ஐம்பதடி ஆழத்தில் விழுந்து தீயினால் பாதிக்கப்பட்ட இவர்களை , வாட்சப்பில் பார்த்ததும் கண் கலங்குகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X