குமரி கடலை மையம் கொண்டது புயல் சின்னம் : மன்னார் வளைகுடா முதல் லட்சத்தீவுகள் வரை எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரி கடலை மையம் கொண்டது புயல் சின்னம் : மன்னார் வளைகுடா முதல் லட்சத்தீவுகள் வரை எச்சரிக்கை

Added : மார் 13, 2018
Advertisement
குமரி கடலை மையம் கொண்டது புயல் சின்னம் : மன்னார் வளைகுடா முதல் லட்சத்தீவுகள் வரை எச்சரிக்கை

சென்னை: இந்திய பெருங்கடலில், வலுவான புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மன்னார் வளைகுடா முதல், லட்சத்தீவுகள் வரை, மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக, இந்திய பெருங்கடலில், குமரிக்கு தெற்கே, மூன்று நாட்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, குமரி பகுதியில், புயல் சின்னமாக சுழல்கிறது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலசந்திரன் கூறியதாவது:இந்திய பெருங்கடல் பகுதியில், குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இது, இன்று இரவுக்குள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகரும். பின், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.அடுத்து வரும் இரு நாட்களுக்கு, குமரி கடலோரம், கேரளாவின் தென் பகுதி மற்றும் மாலத்தீவில், கடல் அலை கொந்தளிப்பாக காணப்படும். மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், பலத்த காற்று வீசும். லட்சத்தீவுகள் வரை காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரம் நீடிக்கும்.எனவே, மன்னார் வளைகுடா முதல், லட்சத்தீவுகள் வரை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்குள் இருந்தால், அவர்கள் உடனடியாக அருகேயுள்ள கரை பகுதிகளுக்கு சென்று விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, இந்திய பெருங்கடலுக்கான புயல் எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'லட்சத்தீவுகளை நோக்கி செல்லும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், தீவிர காற்றழுத்த மண்டலமாகவும் மாறும். மார்ச், 15 முதல், படிப்படியாக வலுவிழக்கும். அதுவரை, கடல் கொந்தளிப்பாக இருக்கும். கனமழை பெய்யும்' என, கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை : புயல் சின்னம் காரணமாக, கன்னியாகுமரி, கேரளாவின் தென்பகுதி மற்றும் மாலத்தீவுகளில், மிதமானது முதல், கனமானது வரை மழை பெய்யும். புயல் சின்னம் நகரும் பகுதிகளை ஒட்டியுள்ள துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ளவர்கள், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X