சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

பித்தா என அழைத்தது ஏன்?
'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று சிவனை பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இதில் சிவனை, 'பித்தன்' என அழைக்க காரணம் என்ன தெரியுமா?சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த போது, ஆட்கொள்ள முதியவர் வேடத்தில் வந்தார் சிவன். சுந்தரரை தன் அடிமை என்றார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என சுந்தரர் கோபித்தார். பின்பு தான் வந்தது சிவன் என்பது சுந்தரருக்கு புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்க, என்ன சொல்லி ஆரம்பிப்பது என குழம்பினார்.

''என்னை பித்தன் என்று திட்டினாயே! அதிலேயே தொடங்கு'' என்றார்.
சுந்தரரும் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை, மூன்று முறை நம் பாவத்தை பொறுப்பாள். பார்வதியோ, எத்தனை முறை வேண்டுமானாலும், நம் பாவம் பொறுப்பாள். பொறுமையில் சிறந்த பார்வதியை, தலையில் வைத்து கொண்டாடாமல், மூன்று முறை பொறுக்கும், கங்கையை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார் சிவன். இப்படி பிறரால் புரிந்து கொள்ள முடியாதபடி செயல்படுவதால் 'பித்தன்' என்றார் சுந்தரர்.


இரண்டு முக்கிய தலங்கள்காசி செல்பவர்கள், ராமேஸ்வரத்திலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி. காசி விஸ்வநாதர் மற்றும் பிற சிவன் கோயில்களில் சிவராத்திரியன்று அபிஷேகம், ஹோமம், வேத பாராயணம் நடக்கும். ராமேஸ்வரத்தில் சிவராத்திரியன்று காலையில் திறக்கும் கோயில், மறுநாள் பிற்பகலில் தான் மூடப்படும். அபிஷேக வழிபாடு இரவு முழுவதும் நடக்கும். தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ர பாராயணம் ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரம் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்திலும், சுவாமி மூன்று பிரகாரங்களிலும் உலா வருவார்.சிவராத்திரியன்று நடந்தவை
* அர்ஜுனன் பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றான்.
* பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான்.
* மார்க்கண்டேயனுக்காக, எமனை சிவன் சம்ஹாரம் செய்தார்.
* பார்வதிதேவி, சிவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள்.
* பார்வதிதேவி, சிவனிடம் ஆகம உபதேசம் பெற்றாள்.
* சிவபெருமான் நஞ்சு உண்டார்.
* வானுக்கும், பூமிக்குமாக லிங்கோற்பவர் என்னும் பெயரில் சிவன் தோன்றினார்.
* கண்ணப்ப நாயனார் ஈசனின் கண்மீது, தன் கண்களை பொருத்தி முக்தி அடைந்தார்.
கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்ய மறுப்பது ஏன்?சிவனின் நாட்டிய வடிவம் நடராஜர். இவர் கையில் அக்னி சட்டி ஏந்தியுள்ளார். இது ஞானத்தை குறிக்கிறது. 'உலகில் பிறந்ததே இறைவனை காண்பதற்காகத்தான், இதைத்தவிர வேறு எந்த இன்பமும் எனக்கு வேண்டாம்' என்ற ஒருமித்த எண்ணத்துடன் சிவனை வணங்கினால், அவர் நமக்கு ஆனந்த வடிவாக காட்சி தருவார் என்பதே ஆடல் தத்துவம். அவர் கையிலுள்ள நெருப்பு, உலகத்திலுள்ள நமது சொந்த பந்தங்கள் போன்ற கட்டுகளை எரித்து, நம்மை விடுதலையடையசெய்கிறது. மேலும், 'நீ எங்கு சென்றாலும், முடிவில் இந்த அக்னிக்கு தான் இரையாவாய். நீ வாழும் காலத்தில் நன்மை செய்தால், இந்த நெருப்பு உன்னை எரிக்கும்போது ஆன்மா குளிரும், கேடு செய்தால் சுடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. கற்பூரத்தை கொளுத்தி, அதன் மீது சத்தியம் செய் என்றால் பயப்படுகிறார்கள். காரணம் கடவுள் நெருப்பு வடிவம் என்பதால் தான்.
தண்ணீர் இல்லாமல் குளியுங்க!


மார்க்கண்டேயரின் ஆயுள் பதினாறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவருக்குரிய மரண நாள் வந்ததும், எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். மார்க்கண்டேயர் உடம்பெங்கும் திருநீறு பூசியபடி, திருக்கடையூர் சிவலிங்கத்தை கட்டியணைத்து கொண்டார்.ஆனாலும் எமன் விடாமல் துரத்தினான். சன்னதிக்குள் நுழைய முயன்ற அவனை, காலால் உதைத்து தள்ளினார் சிவன். இதன் பின், எமன் தன் துாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் வணங்கிச் செல்லுங்கள்,” என உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. இதற்கு 'பாதுகாப்பது' என்று பொருள். 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம், திருநீற்றின் பெருமையை சொல்கிறது. திருநீற்றை பூசும் போது, கீழே சிந்தாமல் 'சிவாயநம' என்று சொல்லி பூச வேண்டும். இதற்கு 'பஸ்ம ஸ்நானம்' அல்லது 'திருநீற்று குளியல்' என்று பெயர். இதனால் மனத்துாய்மையும், புண்ணியமும் உண்டாகும்.
கவுரிசங்கருக்கு எத்தனை முகம்


தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதிகள். பறந்து சென்று, திடீரென ஓரிடத்தில் இறங்கி, உயிர்களை கொல்வது இவர்களின் வழக்கம். சிவன் தன் புன்னகையால் இவர்களை அழித்தார். அப்போது சிவனின் கண்ணில் வழிந்த நீர்த்துளிகள், ருத்ராட்ச விதைகளாக மாறி மரங்களாக வளர்ந்தன.

வலதுபுறம் வழிந்த கண்ணீரில் 12 வகை, இடப்புறம் வழிந்த கண்ணீரில் 16 வகை, நெற்றிக் கண்ணில் 10 வகை ருத்ராட்சம் உண்டாகின. ருத்ராட்சத்திலுள்ள கோடுகளின் அடிப்படையில் முகங்களை கணக்கிடுவர். ஒன்று முதல் 16 முகம் இதில் உண்டு. ஒரு முக ருத்ராட்சத்தை சிவனாக போற்றுவர். இரு முக ருத்ராட்சம் பார்வதியுடன் கூடிய அர்த்தநாரீஸ்வர அம்சமான 'கவுரி சங்கர்' எனப்படுகிறது.இன்றைய ஸ்பெஷல்

சிவன் கோயில் நைவேத்யத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் சிறப்பான நைவேத்ய பிரசாதம் இருக்கிறது.
ஞாயிறு - பாயாசம்
திங்கள் - வெண் பொங்கல்
செவ்வாய் - எள் சாதம்
புதன் - சர்க்கரைப்பொங்கல்
வியாழன் - தயிர் சாதம்
வெள்ளி - வெள்ளை சோறு
சனி - உளுந்து சாதம்
சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு படைக்கும்போது கற்பூரம், ஜாதிக்காய், பத்திரி, லவங்கம் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X