லக்னோ: கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட உ.பி., முன்னாள் அமைச்சரை ஜாமினில் விடுதலை செய்த விவகாரத்தில், 10 கோடி ரூபாய் கைமாறியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் அரசில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி உ.பி., போலீசார் பிப்., 17 ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்; மார்ச், 15ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய, ஏப்., 24ல் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கற்பழிப்பு வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே பிரஜாபதி ஜாமினில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரகசிய அறிக்கை
எனவே, இது குறித்து விசாரணை நடத்த, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திலீப் பி போஸ்லே உத்தரவிட்டார். அந்த உத்தரவுபடி விசாரணை நடத்தி ஒரு ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட முக்கிய குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில், உயர்மட்ட அளவில் பெரும் அளவில் லஞ்சம் விளையாடி வருகிறது. பிரஜாபதிக்கு ஜாமின் கொடுத்த கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஓ.பி.மிஸ்ரா, குழந்தைகளை பாலியல் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் தடுக்கும், 'போக்சோ' நீதிமன்ற நீதிபதியாக, ஏப்.,7 ம் தேதி நியமிக்கப்பட்டார்.
அவர் பணி ஓய்வு பெற மூன்று வாரங்களே இருக்கும் போது, இந்த பணி நியமனம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 'போக்சோ' நீதிமன்ற நீதிபதியாக, லக்ஷ்மி காந்த் ரதூர் என்பவர், 2016 ஜூலை, 18 ம் தேதி முதல் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரை மாற்றி விட்டு தான் நீதிபதி மிஸ்ராவை நியமித்துள்ளனர். நீதிபதி ரதூரை மாற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை.
ரூ.10 கோடி கைமாறியது
பிரஜாபதிக்கு ஜாமின் வழங்க, 10 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. இதில், ஐந்து கோடி ரூபாயை தரகர்களாக செயல்பட்ட மூன்று வழக்கறிஞர்கள் பெற்றுள்ளனர்.'போக்சோ' நீதிமன்ற நீதிபதியாக மிஸ்ராவை நியமித்த மாவட்ட நீதிபதி ராஜேந்திர சிங்கும், நீதிபதி மிஸ்ராவும் மீதியுள்ள ஐந்து கோடி ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். இதில், ராஜேந்திர சிங், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற இருந்தார். தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.