டீ கடை பெஞ்ச்

பதிவு செய்த நாள் : பிப் 25, 2018
Advertisement
  டீ கடை பெஞ்ச்

முதல்வர் வீடு முன் டேரா போடும், 'டுபாக்கூர்கள்!'

''கூட்டணிக்கு தயார்னு சொல்லிட்டாருங்க...'' என, முதல் தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
'''யாரு வே...'' என கேட்டார் அண்ணாச்சி.''நடிகர் கமல் துவங்கி இருக்குற மக்கள் நீதி மையம், வர்ற உள்ளாட்சி தேர்தல்ல, தனித்து போட்டியிட வாய்ப்பு
இல்லையாம்...
''அதே நேரம்,
அ.தி.மு.க., - தி.மு.க., அல்லாத புதுக் கூட்டணியை உருவாக்கணும்னு, கமலிடம் மாவட்ட பொறுப்பாளர்கள் வலியுறுத்தி இருக்காங்க...
''உள்ளாட்சி தேர்தல்ல, கட்சிக்கு விழுற ஓட்டுகளை பார்த்துட்டு, சட்டசபை தேர்தல்ல தனித்து போட்டியா அல்லது கூட்டணியான்னு முடிவு பண்ணலாம்னு, கட்சி நிர்வாகிகளிடம் கமல் சொல்லி இருக்காருங்க...'' என்றார்
அந்தோணிசாமி.''ஆய்வுங்கிற பெயர்ல, அதிரடி வசூல் வேட்டை
நடத்துதாவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' என கேட்டார் அன்வர்பாய்.
''தஞ்சாவூர் மாவட்ட, நெல் கொள்முதல் நிலையங்கள்ல, நெல்லின் தரத்தை ஆய்வு செய்ய, தர ஆய்வுக்குழு, மண்டல ஆய்வுக்குழு, தலைமை அலுவலக விழிப்புக் குழுக்கள் இருக்கு வே...
''இந்த குழுக்கள் சார்புல, வாரத்துல, மூணு நாள், கொள்முதல் நிலையங்களை ஆய்வு பண்ணுதாவ... அப்ப, கொள்முதல் நிலைய ஊழியர்களை மிரட்டி, தலா, 2,000 ரூபாய் வீதம் வாங்கிட்டு போயிடுதாவ வே...
''இப்படி, மூணு குழுக்களுக்கும், 6,000 ரூபாய் வரை, ஊழியர்கள் குடுத்து தொலைக்க வேண்டியிருக்கு... 'இதனால, கொள்முதல் நிலையங்களுக்கு வர்ற விவசாயிகளிடம், கை நீட்ட வேண்டியிருக்கு'ன்னு, இங்க இருக்குற ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.''டுபாக்கூர் நிருபர்களை கண்டுக்காம இருக்காங்க பா...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எல்லா ஊர்லயும் தான், டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் இருக்கா... எங்கன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார்
குப்பண்ணா.''சேலத்துக்கு முதல்வர் பழனிசாமி வர்றப்ப எல்லாம், 20க்கும் மேற்பட்ட டுபாக்கூர் நிருபர்களும், போட்டோ கிராபர்களும், அவர் வீட்டு முன்னாடி டேரா போடுறாங்க...
''இவங்க, முதல்வரைச் சந்திக்க வர்ற கட்சி நிர்வாகிகளை வளைச்சு, 'நீங்க முதல்வரோட இருக்குற படத்தை பத்திரிகையில போடுறோம்'னு சொல்லி, 2,000த்துல இருந்து, 5,000 ரூபாய் வரை கறந்துடுறாங்க பா...
''இவங்களை, மாவட்ட செய்தி துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுக்கிறது இல்லை... இதனால, இவங்களிடம் சிக்கி, கட்சி நிர்வாகிகள் பணத்தை இழந்துட்டு போறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
மேலும் சில நண்பர்கள் வர, அரட்டை தொடர்ந்தது.

மா.செயலர் பதவியை ராஜினாமா செய்யும் மந்திரி!

''சந்திக்க வந்தவாளை வாயடைக்க வச்சுட்டார் ஓய்...'' என, மெதுவடையை மென்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரைச் சொல்றீங்க...'' என விசாரித்தார் அந்தோணிசாமி.''கர்நாடகாவுல, சீக்கிரமே சட்டசபை தேர்தல் நடக்க போறதோல்லியோ... அங்க, பா.ஜ., அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு குடுக்கணும்னு, அங்க இருக்கற, தே.மு.தி.க., காரா முடிவு
பண்ணியிருக்கா ஓய்...''இதுல, 'வெயிட்'டா ஒரு தொகை பார்த்துடலாம்னு கணக்கு போட்டிருக்கா... இது சம்பந்தமா, விஜயகாந்தை, கட்சி ஆபீஸ்ல சந்திச்சு அனுமதி கேட்டிருக்கா ஓய்...
''அவரோ, 'ரெண்டு கட்சிக்கும் ஆதரவு தர வேண்டாம்... நாம, அங்க தனியா போட்டியிடுவோம்... வேட்பாளர்களை ரெடி பண்ணுங்கோ'ன்னு கறாரா சொல்லிட்டார்...
''இதனால, போனவா எல்லாம், எதுவும் பேச முடியாம, திரும்பிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''கொடி காத்த குமரன்னு பட்டம் குடுக்கலாம் போலிருக்குங்க...'' எனச் சிரித்த அந்தோணிசாமி, அடுத்த தகவலை தொடர்ந்தார்...
''மதுரையில, கமல் கட்சி துவக்க விழாவுக்கு வந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மேடைக்கு பின்னாடி, ஸ்பெஷல் கேரவன் ஏற்பாடு பண்ணி, கமல் ஓய்வு எடுக்க வச்சாருங்க... 'உங்க பேரை மேடையில அறிவிக்கும்போது, நீங்க மேடைக்கு வந்தா போதும்'னு அன்போட கேட்டுக்கிட்டார்...
''அப்படியே வந்த கெஜ்ரிவாலுக்கு கைதட்டல்கள் முழங்க வரவேற்பு குடுத்தாருங்க...''அதே மாதிரி, விழாவுல கட்சி கொடியை, கமல் ஏத்துற வரை, நிர்வாகிகள் ரகசியம் காத்தாங்க... கமல் வர்றதுக்கு, 10 நிமிடங்களுக்கு முன்னாடி, ரசிகர் மன்ற நிர்வாகி ஒருத்தர், கட்சி கொடியின் நுனியை மட்டும், கொடி கம்பத்துல
கட்டினாருங்க...''கமல் ஏத்தும் போது தான், மத்தவங்க கொடியை பார்க்கணும்னு, கொடியை ஒரு பைக்குள்ள மடிச்சு, தன் வயித்தோட அணைச்சு வச்சிருந்தார்... கமல் வந்து கொடி கயிற்றை பிடிச்சதும் தான், அந்த நிர்வாகி, கொடியை விடுவிச்சாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மாவட்டச் செயலர் பதவியை ராஜினாமா பண்ண போறாரு... அதுக்குள்ள வரிசை கட்டி நிக்காவ...'' என்றார் அண்ணாச்சி.''எந்தக் கட்சியில, யாரு பா...'' என
கேட்டார் அன்வர்பாய்.
''திருச்சி, அ.தி.மு.க., மாநகர் மாவட்டச் செயலர் நடராஜன்... சுற்றுலா துறை அமைச்சராகவும் இருக்காரு... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இதய பிரச்னைக்கு சிகிச்சை எடுத்தவர், திருச்சியில ஓய்வு எடுத்துட்டு இருக்காரு வே...
''ரொம்பவும் ஓடியாடி வேலை பார்க்க வேண்டாம்னு, மாவட்டச் செயலர் பதவியில இருந்து விலக முடிவு பண்ணிட்டாராம்... இந்த பதவிக்கு, திருச்சி, எம்.பி., குமாரை நியமிக்க தலைமை முடிவு பண்ணியிருக்கு வே...
''ஆனாலும், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, அமைச்சர் வளர்மதின்னு அரை டஜனுக்கும் மேற்பட்டவங்க, மாவட்டச்
செயலர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்திட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.அரட்டை முடிய, நண்பர்கள் கிளம்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை